கல்முனை மாநகர சபை எல்லையினுள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறந்த முறையில் ஒழுங்குப்படுத்தி முன்னெடுப்பது தொடர்பாக உயர்மட்டக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
கல்முனை மாநகர சபை முதலவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில், மாநகர முதல்வர் செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதில் பிராந்திய கொரோனா நிலைமைகள், அதிகார பரவலாக்கம், அரசினால் முன்வைக்கப்படும் சுகாதார பொறிமுறைகள், தொற்று நோயியியல் சட்டதிட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
மேலும் நடமாடும் வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகளுக்கு ஒழுங்கான பொறிமுறைகளை உருவாக்குதல், இறைச்சி கடைக்காரர்கள், வியாபார அனுமதி வழங்குதல் தொடர்பில் உள்ள முரண்பாடுகள் ஆகியவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு, தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் மாட்டிறைச்சியை நடமாடும் வியாபாரம் ஊடாக விற்பனை செய்வதற்கான ஒழுங்கு விதிகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.ஏ.ஆஷிக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, பாதுகாப்பு படை உயரதிகாரி, கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அமீன் றிசாத், கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, கல்முனை பிரதேச செயலக அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.