மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று(புதன்கிழமை) இரவு புலனாய்வுப்பிரிவினர் எனக்கூறிவந்தவர்களினால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட இளைஞன் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று இரவு 10.30மணியளவில் மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு ஏழாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கைதுசெய்யப்பட்ட 22 வயதுடைய சந்திரன் விதுசன் என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து வெளியில் வருமாறு கூறியபோது குறித்த இளைஞர் வெளியில் வந்ததாகவும் இதன்போது வீதியில் நின்ற புலனாய்வாளர்கள் எனக்கூறிக்கொண்டவர்கள் குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர்.
இதன்போது குறித்த இளைஞன் புலனாய்வாளர்கள் எனக்கூறப்பட்டவர்களினால் கடுமையான முறையில் தாக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை குறித்த இளைஞன் நோய் காரணமாக இறந்துவிட்டதாக பெற்றோருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் தாக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததுடன் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி திருமதி ஜீவராணி கருப்பையாப்பிள்ளை மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.டபிள்யு.ஜெயந்த தலைமையிலான பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன் மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.