தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) 15 அம்ச கோரிக்கைகளினை முன்வைத்து பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று காலை அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டதோடு யாழ்.போதனா வைத்தியசாலை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களும் இன்று மதிய உணவு வேளையில் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுகூடி அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாதி உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் அவர்களுக்கான சரியான முறையிலான பாதுகப்பு நடவடிக்கைகள், சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் உரிய நேரத்தில் அரசினால் வழங்கப்பட வேண்டும் அத்துடன் போக்குவரத்து வசதிகளையும் பெற்றுத்தரவேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், வவுனியா வைத்தியசாலை ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா கால விசேட கொடுப்பனவு, விசேட விடுமுறை நாட்களில் கடமைக்கு சமூகமளித்தால் விசேட கொடுப்பனவு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் கொரோனா தடுப்பு செயலணி அமைத்தல் உட்பட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்தே இன்று பிற்பகல் 12 மணியிலிருந்து 12:30 வரையும் இடம்பெற்றிருந்தது.
வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற போராட்ட இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் குறித்த பிரச்சினை தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் தீர்வினை பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார்.
பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போது, “இவர்களினுடைய போராட்டம் நியாயமானது. எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு சென்று உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுத்து நடவடிக்கை எடுப்பேன்.“ என தெரிவித்தார்.
இதேவேளை, மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று வைத்தியசாலைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெக்கப்பட்டது. அரச தாதியர் சங்கம் உட்பட ஆறு சுகாதார அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றது.
இன்று களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கலந்துகொண்டு ஆதரவினை வழங்கினார்.
தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் சுகாதார துறையினருக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கவேண்டும் என இதன்போது சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், கிளிநொச்சியிலும் வைத்தியசாலை ஊழியர்களும் இன்றைய தினம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.