சம்மாந்துறை- புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் புதிதாக 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினமும் (வியாழக்கிழமை) நேற்றும் மேற்கொள்ளப்பட்ட அன்டீஜன் பரிசோதனையிலேயே இவர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று, சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில், எழுமாற்றாக எடுக்கப்பட்ட சுமார் 105 பரிசோதனைகளில் 9 பேர், கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்
குறித்த பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் வளத்தாப்பிட்டி, இஸ்மாயில்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்வீதிகள் தடை செய்யப்பட்டு, இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை இதுவரை காலம் முடக்கப்பட்ட இந்த பகுதியில் 47 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய வளத்தாப்பிட்டியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றமையியால் இந்த பகுதியை முடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது கடந்த மூன்று தினங்களில் இந்த பகுதியில், 47 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இப்பகுதியில் கொரோனா தொற்றுக் காரணமாக ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக வைத்தியர் ஜீ.சுகுணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நேற்று (3) எழுமாறாக எடுக்கப்பட்ட அன்டீஜன் பரிசோதனையை தொடர்ந்து, அம்பாறை- நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் இரு பொதுச்சுகாதார பரிசோதகர்கள், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.