அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க கேப்பிடோல் அலுவலகத்தில் நடந்த வன்முறை குறித்து அவர் பதிவுசெய்த பதிவுகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘ட்ரம்பின் செயல் ஒரு தீவிர விதிமுறை மீறல்’ என்று ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இதுகுறித்து கருத்துதெரிவித்த ட்ரம்ப், ‘எனக்கு வாக்களித்த இலட்சக்கணக்கான மக்களை இது அவமானப்படுத்தும் செயல்’ என கூறியுள்ளார்.
ஃபேஸ்புக்கின் புதிய விதிமுறை படி வன்முறை அல்லது அமைதியின்மையை ஏற்படுத்துவது போல பதிவிடும் முக்கிய நபர்களின் கணக்குகள் ஒரு மாதம் அல்லது தீவிர வழக்குகளில் இரண்டு ஆண்டுகள் வரை இடைநீக்கம் செய்யப்படும்.
ஜோ பைடன் வெற்றி பெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் கடந்த ஜனவரி 7ஆம் திகதி அமெரிக்கா நாடாளுமன்ற கட்டடமான கேப்பிடோல் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.
தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். மேலும், தனது பேச்சை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள கேப்பிடோல் கட்டடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து டுவிட்டர் ட்ரம்பின் அதிகாரப்பூர்வ கணக்கை முடக்கியது.