இந்தியாவில் முதல்முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை (பி1.617.2) கொரோனா வைரஸ் தொற்றால், பிரித்தானியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
புதிய இந்தியக் கொவிட் மாறுபாட்டினால் பிரித்தானியாவில் 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பொதுசுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ‘டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் பிரித்தானியா முழுவதும் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் தீவிர பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸிடமிருந்து பாதுகாக்க, அனைவரும் அதிகபட்ச பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் தலைமை செயலதிகாரி ஜென்னி ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ‘த லான்செட்’ அறிவியல் இதழில் வெளியாகிய ஆய்வறிக்கையில், பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு பரவலாகச் செலுத்தப்பட்டுவரும் ஃபைஸர்- பயோஎன்டெக் தடுப்பூசி, டெல்டா வகை கொரோனா தொற்றுக்கு எதிராக ஐந்து மடங்கு குறைந்த அளவே எதிர்ப்பணுக்களை உருவாக்குவதாக அந்த நாட்டின் பிரான்சிஸ் கிரிக் நிறுவன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.