மன்னாரில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 522 ஆக அதிகரித்துள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் வைத்தியர் ரி.வினோதன் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த வருடத்தில் இதுவரை 505 பேர், கொரோனா வைரஸ் தொற்றாளராக மன்னாரில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் இந்த மாதம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 15 பேர், வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை நானாட்டான் பகுதியில் கடந்த 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட 383 பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவில் வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், அரிப்பு, சாந்திபுரம் பகுதிகளைச் சேர்ந்த 6 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதேபோன்று மடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 132 பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவில் 2 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.