உலகின் பிற நாடுகளுக்கு நூறு கோடி அளவு தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கூறுகையில், ‘பிரித்தானியா மட்டும் உபரியாக உள்ள சுமார் 10 கோடி அளவுகள் கொரோனா தடுப்பூசியை வழங்கும்.
முதல் 50 இலட்சம் அளவுகள் வரும் செப்டம்பர் மாதத்துக்குள்ளாகவும் மேலும் 2.5 கோடி அளவுகள் ஆண்டு இறுதிக்குள்ளாகவும் வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமெரிக்கா 50 கோடி அளவு கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில், ஐநா ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள கோவாக்ஸ் திட்டத்தின்கீழ், சுமார் 80 சதவீத தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், மீதமுள்ளவை இருதரப்பு ரீதியாக பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.