மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்குகொள்வதற்கு அனுமதியில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மன்னார் ஆயர் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மன்னார் மறைமாவட்டத்தை தவிர்ந்த ஏனைய வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தர அனுமதி இல்லை என்பதை அறியத்தருகின்றோம்.
எதிர்வரும் ஜுன் மாதம் 23 ஆம் திகதி, மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றத்தினை நடத்தவுள்ளோம்.
அதனைத் தொடர்ந்து நவ நாள் திருப்பலிகளும் இடம்பெறும். அதில் 15பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும். அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஆடி மாதம் 2 ஆம் திகதி காலை திருவிழா திருப்பலி திருத்தலத்தின் முன் பக்கத்தில் இருக்கும் இடத்தில் இருந்து திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப ஆசீர் வாதமும் வழங்கப்படும். ஒவ்வொரு திருப்பலிகளுக்கும் ஆகக்கூடியது 30 பேர் மாத்திரமே பங்கு கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.