நந்திக்கடல், நாயாறு களப்பு புனரமைப்பு பணிகளை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் வோனந்தா, யாழ். காக்கைதீவு கடல் நீரேரியை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.
நடளாவிய ரீதியில் காணப்படுகின்ற களப்புக்களை புனரமைக்கும் வேலைத் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சரினால் மேற்குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற சுமார் ஒன்பது பிரதான களப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நக்டா, நாரா மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றிற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவற்றின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராயும் நோக்கில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) கூட்டம் நடைபெற்றிருந்தது.
இதன்போது, முல்லைத்தீவு, நந்திக்கடலை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்த அதிகாரிகள், நந்திக்கடல் அபிவிருத்தி திட்டம் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அதேபோன்று, நாயாறு களப்பு அபிவிருத்திக்கான விலைமனுக் கோரல் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், விலைமனுக் கோரல் தொடர்பான விளம்பரங்களை அமைச்சின் இணையத் தளத்தில் தகுதியானவர்களை தெரிவு செய்து வேலைகளை ஆரம்பிக்குமாறு தெரிவித்தார்.
அதேபோன்று, ரெக்கவ களப்பு அபிவிருத்தி திட்டம் மதிப்பீட்டுக்காக பிரதேச சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அருகம்பே களப்பு தொடர்பான அபிவிருத்தி திட்டங்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தாகவும் கடற்றொழில் அமைச்சருக்கு தெரிவித்த அதிகாரிகள், அனுமதி கிடைத்தவுடன் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில், அம்பாறை மாவட்டத்திற்குரிய பாணம மற்றும் பாணகல களப்புக்களின் அபிவிருத்திக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் புத்தளம், சிலாபம், முந்தல் ஆகிய களப்புக்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சர் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.
மேலும், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடலட்டை பண்ணைகளை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பூநகரி களப்புக்களில் இறால் வளர்ப்பு தொடங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நக்டா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அத்துடன், யாழ். காக்கைதீவு களப்பு தூர் வாரப்பட வேண்டுமென தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் அதற்கான நிதியை திரட்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
மேலும், நாடெங்கிலுமுள்ள பிரதான 09 களப்புக்களின் அபிவிருத்திக்கான திட்டங்களையும் இவ்வருட இறுதிக்குள் வகுத்து அப்பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, நக்டா நிறுவனத்தின் தலைவர் நிமல் சந்திரரத்ன, நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.