மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேர் உள்ளடங்களாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னாரில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை முடிவுகளின் படி நேற்றைய தினம் மேலும் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் 5 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் எமில் நகர், சாந்திபுரம் மற்றும் தாராபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
மேலும் மன்னார் ஆடைத்தொழிற்சாலையில் ஒவ்வொரு வாரமும் மேற்கொள்ளப்படுகின்ற அன்டிஜன் பரிசோதனைகளின் போது 70 அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அவற்றில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சின்னக்கடை, சாந்திபுரம், எமில் நகர், பேசாலை, விடத்தல் தீவு, பரப்புக்கடந்தான் மற்றும் பண்டிவிருச்சான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
அத்துடன், இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் சமூகத்தில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய துரித செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். மக்கள் சுகாதார வழி முறைகளை உரிய முறையில் கடை பிடித்து தொற்றிற்குள்ளாகாது உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.