மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரேநாளில் மூவர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் உயிரிழந்துள்ளதுடன் புதிதாக 176 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது கோறளைப்பற்று மத்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை பட்டிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 48 பேருக்கும் வெல்லாவெளி மற்றும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் 2 பேருக்கும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும் பொலிஸார் 2 பேருக்கும் சிறைச்சாலை கைதிகள் 2 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 36 பேருக்கும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேருக்கும் ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேருக்கும் கோறளைப்பற்று மத்தியில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மட்டக்களப்பில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பித்து தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.