டென்னிஸ் உலகில் ‘கிளே ஒஃப் த கிங்’ என வர்ணிக்கப்படும் ஸ்பெயினின் ரபேல் நடால், எதிர்வரும் விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த திடீர் அறிவிப்பானது நடாலின் இரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து நடால் கூறுகையில்,
‘என்னுடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவை எடுப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. என்னுடைய குழுவினருடன் ஆலோசித்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்- விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடருக்கு இடையில் இரண்டு வார இடைவெளி மட்டுமே உள்ளது. செம்மண் தரையில் விளையாடிய பின்னர், உடனடியாக தனது உடலை புல்தரைக்கு ஏற்றவாறு மாற்றுவது எளிதானது அல்ல’ என கூறினார்.
ஆண்கள் டென்னிஸ் உலகில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ள ரபேல் நடால், பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் மட்டும் 13 முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இதன்மூலம் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் அதிக சம்பியன் பட்டங்களை வென்ற வீரர் மற்றும் ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அதிக சம்பியன் பட்டங்களை வென்ற வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில், ரபேல் நடால் 14ஆவது சம்பியன் பட்டத்தை வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சிடம் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இந்தநிலையில் நடாலுக்கு சற்று ஓய்வு தேவை என்பதால் இந்த தொடர்களிலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடர், எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஜூலை 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அதன்பின் இரண்டு வாரம் இடைவெளியில் ஜூலை 23ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 8ஆம் திகதி வரை டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நடைபெறுகின்றது.