அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை, மோதல் என இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டும் என வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சி மத்திய குழுவில் வொஷிங்டனுடனான எதிர்கால திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கொரிய மத்திய செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள செய்தியில், ‘வொஷிங்டனுடனான உறவுகளுக்கான தனது மூலோபாயத்தையும், புதிதாக உருவான அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கை போக்கையும் கிம், கோடிட்டுக் காட்டினார்.
மேலும், உரையாடல் மற்றும் மோதல் ஆகிய இரண்டிற்கும் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். குறிப்பாக நமது மாநிலத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக மோதலுக்கு முழுமையாகத் தயாராக வேண்டும் என வலியுறுத்தினார்’ என தெரிவித்துள்ளது.
இதனிடையே, பியோங்யாங் ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு விரோதக் கொள்கையை பின்பற்றுவதாக குற்றம் சாட்டியிருந்தது.
இதற்கு முன்னர் ராஜீய பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எடுத்த முயற்சிகளுக்கு வடகொரிய தலைவர் கிம் செவி சாய்க்கவில்லை.
இதேவேளை, தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் கடந்த மாதம் வொஷிங்டனுக்கு விஜயம் செய்தபோது, பியோங்யாங்கின் அணு ஆயுதக் களஞ்சியம் தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உறுதியான திட்டம் இல்லாவிட்டால் கிம்மை சந்திக்க மாட்டேன் என்று பைடன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.