கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் வறுமைக்கோட்டினை சேர்ந்தவர்களை எரியூட்டுவதற்கு கட்டணம் அறவிடப்படாது என வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள், வவுனியா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பூந்தோட்டம் மயானத்தில் எரியூட்டப்பட்டு வருகின்றது.
இவ்வாறு சடலங்களை எரியூட்டுவதற்கு இதுவரை காலமும் கட்டணம் அறவிடப்பட்டு வந்தது. ஆனாலும் குறித்த செயற்பாட்டினால் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பத்தினர், பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஆகையினால் இன்று முதல் வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் சடலங்களை மாத்திரம் கட்டணம் அறவிடாமல் எரியூட்டுவதற்கு தீர்மானித்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.