தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் காணப்படும் உட்கட்சிப் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள், எவ்வாறு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கப் போகிறார்கள் என முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.
யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “கூட்டமைப்புக்குள்ளே பிரச்சினை இருக்கின்றது. ஆனால் பார்க்கலாம் என்கின்றார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2001 ஆம் ஆண்டு 15 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது.
அப்போது அங்கு நேரப்பிரச்சினை இருக்கவில்லை. அதனை 4 கட்சிகள் அடங்கிய கூட்டு, நாங்கள் கட்சிதமாக கையான்றோம்.
இதேபோன்று 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 4 கட்சிகளுடன் சேர்ந்து, தமிழர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கூட நியமிக்கப்பட்டனர். அப்போது கூட நேரப்பிரச்சினை இருக்கவில்லை.
போர் நிறைவடைந்த பின்னர் அதாவது 2010க்கு பின்னர்தான் நேரப்பிரச்சினைகள் எழுந்தன. இதன்போது கூட்டமைப்பினைச் சேர்ந்த 13பேர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால் அப்போது மூன்றில் ஒரு பங்கு, தனியானதொரு குழுவாக செல்வதற்கு உரிய பலம் இருக்கவில்லை. காரணம் 4 ஆசனங்கள் மாத்திரமே கிடைக்கப்பெற்றிருந்தன.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்திருந்தது. 16 பேர் கொண்ட நாடாளுமன்ற குழு தெரிவு செய்யப்பட்டது.
அதில் புளொட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய மூன்று கட்சிகளிலும் தலா இருவராக 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள், தனி நாடாளுமன்ற குழுவாக அங்கீகரிக்க வேண்டுமென சபாநாயகரை கோரியிருந்தால் அவர் அங்கீகரித்திருக்க வேண்டும்.
இப்பொழுதும் கூட மொத்த 10 பேரில் மூன்றில் ஒன்று என கூறினால், 4பேர் இருந்தால் போதுமானதாகும்.
அதாவது தற்போது டெலோவில் மூன்று பேரும் புளொட்டில் ஒருவரும் இருக்கின்றார்கள்.
நீங்கள் கூறினால் அதில் இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக பிரிவு என்று அங்கீகரிப்பார்கள். அப்போது நேரம் கிடைக்கும். இல்லாவிடின் அவர்களுடன் கலந்துரையாடி பெற முடியாவிடின் தருகின்ற நேரத்தை 10 ஆக பிரித்து எங்களுடைய 4 பேரின் நேரத்தை தாருங்கள் என கோரலாம்.
இதனையும் உங்களினால் ஒற்றுமையாக செய்துக்கொள்ள முடியாவிடின், மக்களின் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை பெற்றுக்காடுக்க போகின்றீர்கள்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.