இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மாகாண அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு இந்தியா எந்ததொரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சிவசக்தி ஆனந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை- இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருந்தால், தமிழ் மக்களிற்கு ஏற்ப்பட்ட இழப்புக்களை தடுத்திருக்க முடியும்.
இவ்விடயத்தில் ஏனைய தமிழ்த் தலைவர்கள் தவறிழைத்துள்ளதுடன் இலங்கை அரசாங்கமும் பாரிய தவறிழைத்துள்ளது.
மேலும் இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 வருடங்கள் கடந்துள்ளன. அதாவது போருக்கு பின்னரான காலப்பகுதியிலாவது, மாகாண அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு எந்ததொரு முயற்சிகளையும் இந்தியா எடுக்கவில்லை.
இந்நிலையில் இன்றுள்ள அரசு, மாகாணங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்களையும் பறித்தெடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
எனவே இந்தியா, எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தனது முழு முயற்சியினையும் மேற்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.