கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு, திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை), கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இவ்வாறு தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 48க்கும் மேற்பட்டோருக்கு இன்று காலை, திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டமையினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலைகள் இரண்டிலும் சுமார் 3000 பேர் பணியிர் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு தொகுதியினருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், அவர்களில் 48 பேர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளாகி இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று காலை தொழிற்சாலைக்கு வருகைத் தந்த இந்த ஊழியர்களுக்கு சுகயீனம் ஏற்பட்டுமையால் தொழிற்சாலை பேருந்து மற்றும் வாகனங்களில் இவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், குறித்த நோயாளர்களில் அபாயகரமான தாக்கத்தில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு இரண்டாவது கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகளும் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் முதல் கட்டமாக தேவைப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அண்மையில் ஊடகங்களில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஊழியர்கள், வழமைப்போன்று இன்று பணிக்கு சென்றிருந்தபோதே திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.