மலையகத்தில் மந்த கதியிலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளர் சோ.ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சோ.ஸ்ரீதரன் மேலும் கூறியுள்ளதாவது, “மலையகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் குறைவடைந்துள்ளன.
அதாவது, உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை, பெருந்தோட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதில்லை.
எனவே கொரோனா தடுப்பு பணிகளை, பெருந்தோட்ட பகுதிகளிலும் அரசாங்கம் விரைவாக முன்னெடுப்பது மிகவும் அவசியமாகும்.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா சடலங்களை அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கு மக்கள் பெருமளவு நிதியை செலவிடும் நிலையும் உள்ளது.
இதற்கும் உரிய நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.