2020ஆம் ஆண்டுக்கான யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப்போட்டியில் வேல்ஸ் அணியை 4-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி டென்மார்க் வெற்றி பெற்றுள்ளது.
நெதர்லாந்தின் ஜோஹன் க்ரூஜ்ஃப் அரினா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் டென்மார்க் வீரர் காஸ்பர் டோல்பெர்க் 27 ஆவது மற்றும் 48 ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல்களை புகுத்தினார்.
பின்னர் 88 ஆவது நிமிடத்தில் அவ்வணி சார்பாக ஜோகிம் முஹ்லே அடுத்த கோலை புகுத்த டென்மார்க் அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து மேலதிக நேரத்தில் டென்மார்க் அணி சார்பாக மார்ட்டின் ப்ரைத்வைட் மற்றுமொரு கோலை அடிப்பதற்கு முன்னர் வேல்ஸ் அணியின் மாற்று வீரர் ஹாரி வில்சனுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
இருப்பினும் டென்மார்க் அணி குறித்த போட்டியில் 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கடினமான குழு A இலிருந்து சிறப்பாக விளையாடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய வேல்ஸ் அணியின் பயணத்திற்கு டென்மார்க் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இன்று நெதர்லாந்து மற்றும் செக் குடியரசு அணிகளுக்கு இடையில் இடம்பெறும் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் காலிறுதி போட்டியில் டென்மார்க் அணி மோதவுள்ளது.