தற்போதைய அரசாங்கத்தினை கலைக்குமாறு கோருபவர்கள் யாரை ஆட்சிப்பீடம் ஏற்ற முனைகின்றனர் என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைவர் நாகராசா விஸ்ணுகாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்முனையில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுஜன கூட்டணியில் நாற்பது கட்சிகள் இணைந்து ஒப்பந்தம் செய்திருந்தோம்.
அப்போது எங்களுடன் சிறந்த புரிந்துணர்வுடன் நடந்து கொண்டவரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ.
அந்த காலப்பகுதியில் எங்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தினோம். அது இப்போது சாத்தியமாகியுள்ளது.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ சிறந்த நிர்வாகி அவர் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக மாறி அதனுடாக அமைச்சு பதவியையும் பெற்று நாட்டின் சகல பாகங்களுக்கும் சிறந்த முறையில் சேவையாற்ற வேண்டும். அதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.