தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அடைக்கும் அரசாங்கம், மிதக்கும் கொட்டகை அமைத்து அங்கே சீனர்கள் சுகபோகமாக வேலை செய்ய அனுமதி வழங்கியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரியில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று(செவ்வாய்கிழமை) பார்வையிட்டிருந்தனர்.
இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கௌதாரிமுனை பகுதியில் சீனர் ஒருவரால் அமைக்கப்பட்ட கடலட்டைப்பண்ணையை பார்ப்பதற்காக வந்திருந்தோம்.
குறித்த பகுதி கௌதாரிமுனை கல்முனை பகுதி மக்கள் காலாதிகாலமாக தொழில் செய்து வருகின்ற இடமாக இருக்கின்றது. அவ்வாறு கடல் தொழிலில் ஈடுபடுகின்ற மக்களின் சம்மதம் ஏதும் பெறப்படாமல் கடலட்டை வளர்ப்பதற்கும், அவர்கள் தங்குவதற்கான மிதக்கும் கொட்டகையும் அமைத்துள்ளார்கள். சகல வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
அவ்வாறான இடத்திலேயே அந்த சீனர் கடலட்டை வளர்ப்பினை மேற்கொண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எந்தவிதமான முறையான அனுமதிகளும் பெறப்படாமல் குறிப்பாக இந்த பிரதேச மீனவர்களின் சம்மதம் இல்லாமல் இந்த இடம் அவர்களிற்கு கடலட்டை வளர்ப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.
தேசிய நீரியல் அபிவிருத்தி திணைக்களத்தின் அரியாலையில் இருக்கின்ற ஓர் அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டிருப்பதாக தகவல் இருக்கின்றது. ஆனால் எந்தவிதமான ஆவணமும் அவர்களால் காட்டப்படவில்லை.
ஒரு வெளிநாட்டவர் எவ்வாறு இலகுவாக வந்து இந்த இடத்திலே இடத்தை பிடித்து கடலட்டை வளர்க்கின்ற செயற்பாடு இடம்பெறுகின்றது என்பது ஒரு கேள்வியாகின்றது. இதனை சட்டவிரோதமான நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
இது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். திஸ்ஸமகரகமவிலே சீன இராணுவத்தினருக்கு ஒப்பான உடையுடன் நின்று வேலைகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில முறைப்பாடுகள் எழுந்ததை அடுத்து அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. அது தொடர்பாக விசாரிப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆனால் இங்கே அது தொடர்பாக ஆட்சேபனைகள் எழுந்திருக்கின்ற போதிலும்கூட அந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.