தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகளுக்காக குரல்கொடுக்கும் கட்சியாகவே இருந்து வருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு – ஊறணி – மன்றேசா வீதியிலுள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரினால் சின்ன ஊறணியை சேர்ந்த 35 வயதான மகாலிங்கம் பாலசுந்தரன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் ஊறணியிலுள்ள அவரது வீட்டுக்கு நேற்று(செவ்வாய்கிழமை) சென்ற இரா.சாணக்கியன் கொல்லப்பட்டவரின் உறவினர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது தனது மகன் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் தனது மகனின் கொலைக்கு நீதிவேண்டும் என பெற்றோரால் தெரிவிக்கப்பட்டது.
தனது மகனை படுகொலைசெய்த பொலிஸ் உத்தியோகத்தரை தூக்கில் போடவேண்டும் எனவும் அவர்களினால் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவரின் குடும்ப உறவினர்களுடன் கலந்துரையாடிய இரா.சாணக்கியன், பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரி, சட்டத்தரணி ஆகியோருடனும் தொடர்புகொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினார்.
அத்துடன் எதிர்காலத்தில் குறித்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை முன்னெடுக்க தயாராகவுள்ளதாகவும், கொல்லப்பட்ட இளைஞனுக்கு அரசாங்கம் நஷ்ட ஈட்டினை வழங்கவேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் குரல்கொடுக்கும் எனவும் இதன்போது இரா.சாணக்கியன் குறிப்பிட்டார்.
‘இந்த மரணத்தினை வைத்து அரசியல் செய்யவேண்டும் என்ற நோக்குடன் செயற்படவில்லை, தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் அநீதிகள் குறித்து குரல்கொடுக்கும் கட்சியாகவே இருந்துவருகின்றது.
அந்த வகையில் இந்த சகோதரருக்கும் நீதிகிடைக்கவேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் நானும் உறுதியாகவுள்ளோம். இந்த சம்பவத்திற்கு பின்னால் உள்ள உண்மைத்தன்மையினை அனைவரும் அறியவேண்டும்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஒன்றுக்கொன்று மாறுப்பட்ட கருத்துகள் வெளிவருகின்றது. இந்த நிலையில் குறித்த இளைஞனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரையில் நாங்கள் இந்த குடும்பத்துடனும் கிராமத்துடனும் தோல்கொடுத்து நிற்பேன்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.