ஜி.எஸ்.பி வரி சலுகையை, பயங்கரவாத சட்டத்தை அகற்ற மாத்திரம் பயன்படுத்தாமல் அரசியல் தீர்விற்கும் ஐரோப்பிய ஒன்றியம் பயன்படுத்த வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
வவுனியாவில் காணாமல் போன உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்ட பந்தலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கோ.ராஜ்குமார் மேலும் கூறியுள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்டோரினால் மேற்கொள்ளப்படும் போராட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை, 1600ஆவது நாளை எட்டவுள்ளது. இதனால் அன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி.வரி சலுகையை, பயங்கரவாத சட்டத்தை அகற்றுவதற்கு மட்டுமல்லாமல் அரசியல் தீர்விற்கும் பயன்படுத்த வேண்டும்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.வரி சலுகையை நிறுத்துவது பற்றிய பேச்சின் காரணமாக, இலங்கை அரசில் ஓர் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதை அதன் நடவடிக்கையின் ஊடாக அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம், ஜனாதிபதி பைடன் நிர்வாகத்தின் ஆசீர்வாதத்துடன் இலங்கையில் அரசியல் தீர்வை அடைய முடியும். தமிழர்களிடையே ‘பொது வாக்கெடுப்பு’ எடுப்பதன் ஊடாக இந்த தீர்வை அடைய முடியும்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க மத்தியஸ்தத்துடன் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.