டயகம மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலம், 2ஆவது உடற்கூற்று பரிசோதனைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
மூன்று சட்ட வைத்தியர்கள் அடங்கிய குழு மற்றும் பிரதேச பரிசோதனை நீதவானின் மேற்பார்வையில் இன்று காலை 8.30 மணியளவில் சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சிறுமி ஹிஷாலினியின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) தோண்டி எடுக்கப்பட இருக்கின்றது.
குறித்த சிறுமியின் சடலம், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கு அமைவாக தோண்டி எடுக்கப்பட்டு, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்ந்த நீதவான் லக்சிகா குமாரி ஜயரத்ன, விசேட வைத்திய குழுவின் முன்னிலையில் இன்று காலை 8.30 அளவில் சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் பொலிஸ் பாதுகாப்புடன் சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்ததன் பின்னர், பேராதனை போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் அவர் கட்டளை பிறப்பித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமி, இம்மாதம் 3ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.