சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பிலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியும் பொது அமைப்புகளும் இணைந்து குறித்த போராட்டத்தினை மட்டக்களப்பு நகரில் இன்று முன்னெடுத்திருந்தன.
நாடாளுமன்ற உறுப்பினராகவும் முன்னாள் அமைச்சராகவும் ரிசாத் பதியூதின் இருந்த போதிலும் ஒரு சிறுமியை வேலைக்கு அமர்த்தி, துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி படுகொலை செய்வதற்கு காராணமாக இருந்ததற்காக உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் சிறுமியின் படுகொலை குறித்த விசாரணைகளை துரிதப்படுத்தி, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதேவேளை சிறுவர் மற்றும் சிறுமிகளை வேலைக்கமர்த்துவது குறித்த சட்ட திருத்ததினை மேற்கொண்டு, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
குறித்த போராட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் செயலாளர் சட்டத்தரணி திருமதி மங்களா சங்கர் உட்பட பெருமளவான மகளிர் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.