கொழும்பு- விகாரமாதேவி பூங்காவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் செயற்றிட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிறது.
ஜப்பானில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 728,460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளே இவ்வாறு இரண்டாவது டோஸ் வழங்கும் செயற்றிட்டத்திற்கு பயன்படுத்தப்பட இருக்கின்றது.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலுள்ள 62 நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதன் பின்னர், மீதமுள்ள அளவுகள் கேகாலை மாவட்டத்துக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அஸ்ட்ராசெனெகாவை முதல் கட்ட தடுப்பூசியாகப் பெற்று 2ஆம் தடுப்பூசிக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
ஆகவே குறித்த தடுப்பூசியை பெற வருபவர்கள், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்ற சான்றிதழ், தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்துவர வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவிப்பு விடுத்துள்ளனர்.