ஹிஷாலினியின் மரணம் தன்னையும் தனது குடும்பத்தினரையும் மிகவும் வேதனைக்கு உட்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இலங்கையை உலுக்கிய ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் விளக்கமளிக்கும்போதே ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “ஹிஷாலினி 16 வயதைக் கடந்ததன் பின்னரே எமது வீட்டுக்கு தரகர் ஊடாக வருகை தந்தார். அவருக்கு தனியறை வழங்கப்பட்டதோடு, அதனுள் குளியலறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தன.
ஹிஷாலினி எமது வீட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் ஒரு நாளேனும் ஹிஷாலினியை பார்ப்பதற்காக வரவில்லை. ஆனாலும் நாங்கள் சகோதரி ஹிஷாலினிக்கு எந்தவொரு குறைகளையும் வைக்கவில்லை. அவரை நன்றாகவே கவனித்து வந்தோம்.
கடந்த 3ஆம் திகதி காலை 6.45 மணியளவில் ஹிஷாலினி தீ வைத்துக்கொண்டு அலறியுள்ளார். சத்தம் கேட்டு எனது மாமாவும் மாமியும் என்ன செய்வதென்றே அறியாமல் அந்த தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.
எனினும் முடியவில்லை என்பதால், அருகில் இருந்த நீச்சல் தடாகத்தில் குதிக்குமாறு தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் அவரது உடலில் உள்ள தீயை கடும் போராட்டத்திற்கு பின்னரே அணைத்துள்ளனர்.
அதன்பின்னர், 1990 என்ற அவசர இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி, ஹிஷாலினியை சரியாக 7.33 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால், பொலிஸாரோ அவரை 8 மணிக்கு பின்னரே மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக நீதிமன்றிற்கு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தெரிந்துகொண்டேன்.
ஹிஷாலினி இறக்கும் நாள் வரையில் தினமும் எனது மனைவி அவரைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்கு சென்று வந்தார். அவருடைய உடலில் பெரும் பகுதி பாதிப்படைந்துள்ளதாகவும் அதனை சரிசெய்ய அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டுமெனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக 10 இலட்சம் வரையில் செலவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, எவ்வளவு ரூபாய் செலவானாலும் பரவாயில்லை எனவும் ஹிஷாலினி எமக்கு மீண்டும் தேவையெனவும் எனது மனைவி மருத்துவரிடம் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு நாங்கள் ஒவ்வொரு நாளும் ஹிஷாலினியை குணப்படுத்துவது தொடர்பாக முயற்சித்து வந்தோம் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
அவர் வைத்தியசாலையில் இருந்த நாள் வரையில் ஹிஷாலினியின் தாய் வைத்தியசாலைக்கு வந்து சென்றதாகவும் சுமூகமாக உரையாடி இருந்ததாகவும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் அவர் இறந்ததன் பின்னர் அவரது தாய் உண்மைக்கு புறம்பாக சில அரசியல்வாதிகளின் கருத்துக்கு செவிசாய்த்து, சில ஊடக விபச்சாரிகளோடு சேர்ந்து வேறொன்றை சொல்கிறார்.
ஹிஷாலினிக்கு இருட்டறை வழங்கப்பட்டதாகவும் அவரை கொடுமைப்படுத்தியதாகவும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் ஒருமுறைகூட எமது வீட்டுக்கு வராமல் எவ்வாறு இப்படி தெரிவித்தார் என்பது எனக்கு புரியவில்லை.
எந்தவொரு குற்றமும் செய்யாமல் எனது மனைவியும் மாமாவும் மைத்துனரும் விளக்கமறியிலில் இருக்கிறார்கள். இன்னும் எனது பிள்ளைகள் இருவர் மாத்திரமே எஞ்சியிருக்கிறார்கள். அவர்களை மட்டுமே விட்டுவைத்திருக்கிறார்கள்.
ஹிஷாலினி எமது வீட்டுக்கு பணிக்கு வந்தவுடன் அவரது பெற்றோருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பின்னர் அவர் பணியாற்றிய 7 1/2 மாத காலப்பகுதியில் 2 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதோடு, அவர் இறந்ததன் பின்னர் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் அவரது குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
எனவே, ஹிஷாலினி மரணத்தில் எந்தவொரு சந்தேகமும் இருக்கக்கூடாது. இந்த விடயத்தில் முழுமையான விசாரணைகள் இருக்க வேண்டும்.
சுதந்திரமானதும் நேர்மையானதுமான விசாரணைகள் இடம்பெறுவது அவசியம். குற்றவாளி யாராக இருந்தாலும் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.