காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் மீண்டும் கண் துடைப்பான செயற்பாடுகளை முன்னெடுக்காமல், எமது உறவுகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க அரசு முன்வர வேண்டுமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளின் சங்கத்தின் ஆலோசகரான தாமோதரம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தாமோதரம் பிரதீபன் மேலும் கூறியுள்ளதாவது, “சர்வதேசம் இவ்விடயத்தில் மீண்டும் கவனத்தை செலுத்தி, எங்களுக்கான நீதியினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அத்துடன், இன்று வடக்கு பகுதியில் 2000 நாட்களை கடந்து உறவுகளின் நீதி கோரல் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
ஆகவே, மீண்டும் மீண்டும் கண் துடைப்பான செயற்பாடுகளை முன்னெடுக்காமல், எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.
எமது நாட்டில் யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்தும் கூட பாதிக்கப்பட்ட உறவுகள் முன்னாள் போராளிகள் இன்று ஒரு வேளை உணவினை பெற்றுக்கொள்ள முடியாத சூழலை எதிர்கொண்டுள்ளனர். இதனை அரசும் சர்வதேசமும் புரிந்து கொண்டு உதவிகளை வழங்க வேண்டும்.
மேலும், இந்த அரசாங்கம் குறித்த உறவுகளுக்காக செயற்படுகின்ற செயற்பாட்டாளர்கள் மற்றும் இணைப்பாளர்களை அச்சுறுத்துவதை விடுத்து பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.