தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை மீறுவோரை கண்டறியும் வகையிலான தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் இன்றும் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில், பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதில் சுகாதார துறையினர் பல சவால்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவேதான், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி செயற்படுவோரை கண்டறியும் வகையிலான நடவடிக்கைகளை, மட்டக்களப்பு பொலிஸார் நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர்.
அந்தவகையில் இன்றைய தினமும், மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புறநகர்ப்பகுதிகளில் பொலிஸாரும் மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்களும் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இருதயபுரம், கூழாவடி, புன்னைச்சோலை, மாமாங்கம், பாலமீன்மடு ஆகிய பகுதிகளில் இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி திறக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள் பொலிஸாரினால் மூடப்பட்டதுடன், தேவையற்ற வகையில் நடமாடியவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு, திருப்பியனுப்பிவைக்கப்பட்டனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி பயணம் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.