மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக சிலர் மாத்திரமே குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது, நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்களான கௌரி, து.மதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி இராணுவத்தினருடன் இணைந்து, ஊர்காவல் படையினரால் சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கர்பிணித் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள், அங்கவீனம் அடைந்தவர்கள் என பலர் கொண்டுசெல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இதில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
குறித்த படுகொலை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றபோதும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படவில்லை என இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.
இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக தூபியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மக்கள் கலந்துகொள்ளாத நிலையில் வீடுகளில் தமது உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.