நாட்டில் தடுப்பு காவலிலுள்ள சிறைக்கைதிகளில் பலர், தொடர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சி மற்றும் போதைக்கு அடிமையாகுதல் போன்ற விபரீத நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேசிய சிறைக்கைதிகள் தினத்தினை முன்னிட்டு குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் குரலற்றவர்களின் குரல் அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டிலுள்ள 26 சிறைச்சாலைகளில் சுமார் 20ஆயிரத்து 228 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
அதாவது, நாட்டினுடைய சிறைக்கட்டமைப்பின் பிரகாரம் சுமார் 12 ஆயிரம் கைதிகளை மாத்திரமே தடுத்து வைத்துப் பராமரிக்க முடியும் என சிறைத்துறை தலைமையகம் கூறியுள்ளது.
மேலும், நாட்டுக்குள் அன்றாடம் அதிகரித்துச்செல்கின்ற குற்றச்செயல்கள் காரணமாகவே சிறைக்கூடங்கள் நிரம்புவதாக கூறிவிட்டு வெறுமனே ஒதுங்கிவிட முடியாது.
வளப்பற்றாக்குறைகளை கோடிட்டுக்காட்டிக்கொண்டிருக்கும் சட்டம் மற்றும் நீதித்துறையின் தாமதம், கைதிகளுக்கான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதிலிருந்து தூரமாகவே நிற்கிறது.
சட்டத்துறை காரியாலயத்திலும் நீதிமன்றங்களிலும் வழக்குக்கோவைகள் குவிந்து கிடக்கின்றன.
வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுமென நீதி அமைச்சு தெரிவித்து வருகின்றது. ஆனாலும் பெரும்பாலான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படாமல் நீண்டகால தவணைத்திகதியிடப்பட்டு வருவதையே அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
விசேடமாக இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ‘ஸ்கைப்’ தொழிநுட்பத்தின் வழியே நீதவான ஊடாக நீதிமன்ற வழக்குகள் இடம்பெற்று வருகின்றபோதும், பாதிக்கப்பட்ட தரப்பு நியாயங்களை நேரடியாக மன்றுக்கு எடுத்துக்கூறி முறையிடுவதில் இடையூறுகள் காணப்படுகின்றன.
நடைமுறையிலிருந்துவந்த தண்டனைக் கைதிகளுக்கான வீட்டு விடுப்பு வழங்கும் செயற்பாடானது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு சமூக பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துவரும் தமது அன்புக்குரிய உறவவுகளைப் பார்த்துப்பேசுவதற்கு கைதிகளால் முடியாமல் இருக்கின்றது.
மேலும், ஊட்டச்சத்துடன் கூடிய போசாக்கான உணவு, போதுமான மருத்துவ வசதி மற்றும் அத்தியாவசியத்தேவைகளை ஈடுசெய்ய முடியாமல் கைதிகள் விரக்தியடைந்துள்ளார்கள்.
இவ்வாறான விடயங்களால் சிறைத்தடுப்பில் உள்ளவர்கள் இயல்புக்கு மாறான உடல், உள நெருக்கீடுகளுக்கு உள்ளாகி வருவதாக கைதிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கவலையில் உள்ளனர்.
அத்துடன் தொடர் மன அழுத்தமானது வன்முறை, போதைக்கு அடிமைப்படுதல், தற்கொலை எண்ணம் போன்ற விபரீத நிலைக்கு கைதிகளை இட்டுச்செல்லும் அபாயம் ஏற்படலாம்” என அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.