மன்னார்- தாராபுரம், துருக்கி சிட்டி பகுதியில் அமைந்துள்ள கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கையளிக்கப்பட்டுள்ளன.
இலங்கை தேவ சபைகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, இடை நிலை சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மாகாண ரீதியாக வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு அங்கமாக வடக்கு பிராந்திய தேவ சபையின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக மன்னார் மாவட்டத்தில் தாராபுரம், துருக்கி சிட்டி பகுதியில் அமைந்துள்ள கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில், சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர்களின் நலனை கருத்தில் கொண்டு நூறு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் மற்றும் சுகாதார பொருட்கள் உள்ளடங்களாக ஒரு தொகுதி பொருட்கள், பிராந்திய தேவ சபையின் ஊழியர்களினால், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதனிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது வைத்திய கலாநிதி ரி.ஒஸ்மன் டெனி மற்றும் வைத்திய கலாநிதி திருமதி சிறிமதி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.