2020ஆம் ஆண்டில் உலகெங்கிலும் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 227 பேர் உயிரிழந்துள்ளனர்.
காடுகள், இயற்கை வளங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது இவர்கள் உயிரிழந்துள்ளதாக ‘கிளோபல் விட்னஸ்’ எனும் மனித உரிமைக் குழு நடத்திய ஆய்வின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
கொலம்பியாவில் பழங்குடியினருக்குச் சொந்தமான நிலம், காடுகள் அல்லது கோக்கோ பயிர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முயன்ற சுமார் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதுபோன்ற காரணத்துக்காக உலகில் மிக அதிகமானோர் கொலம்பியாவில் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அதற்கு இரண்டாம் நிலையில் மெக்சிகோ உள்ளது. அங்கு 30 பேர், காடுகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸில் 29 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அவர்கள் சுரங்கவேலைகள், மரம் வெட்டுதல், அணை கட்டும் திட்டம் ஆகியவற்றை நிறுத்தும் முயற்சியின்போது உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
கால நிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கை 2015 ஆம் ஆண்டு கைச்சாத்தானது தொடக்கம் ஒவ்வொரு வாரமும் சராசரியாக நான்கு இயற்கை ஆர்வலர்கள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.