தமிழர்களின் துயர நிலையறிந்து ஐ.நா. இன்னமும் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக முன்வைத்துள்ள அறிக்கை குறித்து இன்று (புதன்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கை அரசாங்கத்தின் மேல் முழுவதும் நம்பிக்கையிழந்து, கொல்லப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக உங்களை மட்டுமே நம்பி காத்திருக்கும் மக்களுக்கு மனித உரிமைகள் ஆணையகத்தின் செப்டெம்பர் 2021 அறிக்கை என்பது, மனச்சஞ்சலத்தையும் அமைதியின்மையையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
ஒருசில வாரங்களுக்கு முன்புதான் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக எந்த தேடுதலையோ வேறெந்த நடவடிக்கைகளையோ நடாத்த வேண்டாம் என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கும் சூழ்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் மேல் நம்பிக்கைகொண்டு, அவர்கள் அனைத்தையும் செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருப்பது தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில்,அதனைக் கையாள்வதில், யுத்தத்திலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றுவதில் ஐ.நா. தவறிழைத்துவிட்டதோ என்பதைக் கண்டறிவதற்காக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டதை அனைவரும் அறிவர். ஏற்கனவே இந்த விடயத்தில் ஐ.நா. தன்னை சுயவிமர்சனம் செய்துள்ளது.
அதேபோல் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் தவறிழைக்காமல் செயற்பட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் ஆதங்கமாக இருக்கின்றது.
கடந்த மார்ச் மாத அறிக்கையிடுதலின்போது இலங்கை அரசாங்கத்திற்கு மேல் பொருளாதார, பிராயண தடைகள் கொண்டுவரப்படுமாக இருந்தால் அது ஒட்டுமொத்தமான இலங்கை மக்களையும் பாதிக்கும் என்ற அடிப்படையில், அவ்வாறான தடைகளுக்குப் பதிலாக சர்வதேச சட்டங்களைப் பின்பற்றுகின்ற அரசுகள் தத்தமது நாடுகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் பரிந்துரை செய்திருந்தது.
ஆனால் இந்த இடைப்பட்ட ஆறு மாதங்களில் தமிழ் மக்களின்மீது மோசமான அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதே தவிர, அச்சத்தின் மத்தியில் வாழ்கின்ற தமிழ் மக்களை அரவணைத்து அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான எத்தகைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
காலம் கடந்துபோவதற்கு முன்பாக இலங்கை அரசாங்கம் தனது நாட்டின் ஒருபகுதி குடிமக்களுக்கு எதிராகச் செயற்பட்டது என்பதையும் இதனால் அவர்களில் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்பதையும் ஐ.நா. சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலமாகவே இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடக்காதவாறு தடுப்பதற்கும் தமிழ் மக்களுக்கு உரித்தான நீதி கிடைப்பதற்கும் வழிவகுக்கும் என்று நம்புகிறோம்.
ஐ.நாவின் மீதும் அதன் உறுப்பு அமைப்புகள் மீதும் தமிழ் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஐ.நா.வும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகமும் காப்பாற்றும் என்று எதிர்பார்க்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.