கனடாவில் இன்று பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், மீண்டும் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ 3 ஆவது முறையாகவும் ஆட்சிபீடம் ஏறுவாரா என்ற எதிர்பார்ப்பு நீடிக்கின்றது.
இந்நிலையில், நடைபெறவுள்ள கனேடிய பொதுத் தேர்தலில் இலங்கையின் முன்னாள் நீதிபதி மற்றும் சட்டத்தரணியுமான தர்மசேன யகண்டவெல போட்டியிடுகின்றார்.
தர்மசேன கனேடிய பொதுத் தேர்தலில் என்.டி.பி. ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் அபோட்ஸ்ஃபோர்ட் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருடன் சேர்த்து 5 வேட்பாளர்கள் அந்த இடத்திற்கு போட்டியிடுகின்றனர்.
இரண்டு வருடகாலப்பகுதியில் இரண்டாவது தடவை கனடாவில் பொதுமக்கள் பொதுதேர்தலில் வாக்களிக்கின்றனர்.
குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக தேர்தலை அறிவித்த கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகஸ்ட் மாதம் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
ஐந்து வாரகாலமாக தீவிரமாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து தலைவர்களும் வாக்காளர்களை நோக்கி தங்கள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தனர்.
2019 ஒக்டோபரில் இடம்பெற்ற தேர்தலின் போது லிபரல் கட்சி மயிரிழையிலேயே தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது. எனினும் ஓகஸ்ட் மாதம் ட்ரூடோ தேர்தலை அறிவித்த பின்னர் கட்சிக்கான ஆதரவு குறைவடைய தொடங்கியது. கென்சவேர்ட்டிவ் கட்சியின் ஆதரவு அதிகரிக்க தொடங்கியது.
கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் எரின் ஓ டுல் கனடா மக்களிற்கு பெருமளவு அறிமுகமாகதவராகவே தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். ஆனால் மிதவாத வேட்பாளர்களை நோக்கிய அவரது பிரச்சாரம் வெற்றியளிக்க தொடங்கியுள்ளது.
இதேவேளை, செப்டம்பர் முதல் கருத்துக்கணிப்பில் இரு முக்கிய கட்சிகளுக்குமிடையில் கடும் போட்டி காணப்படுகின்றது. இரு பிரதான கட்சிகளும் இரண்டு வருடத்திற்கு முன்னர் தங்கள் பிரச்சாரத்தை முடித்த இடத்திலேயே மீண்டும் முடித்துள்ளன.
லிபரல் கட்சிக்கு வாக்காளர்கள் அதிகமாக உள்ள கியுபெக் ஒன்டாரியோ போன்ற பகுதிகளில் அதிக செல்வாக்குள்ளது. கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு அவர்களது பாரம்பரிய பகுதிகளான அல்பேர்ட்டா, சஸ்காச்சுவெனிலும் பெரும் ஆதரவு காணப்படுகின்றது எனவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. அதேபோன்று கனடாவின் மக்கள் கட்சிக்கும் ஆதரவு அதிகரித்துள்ளது.