ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று(வியாழக்கிழமை) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்லல், 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவை சமர்ப்பித்தல் மற்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் திட்டமொன்றை தயார்ப்படுத்தல் தொடர்பில் இதன்போது பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாட்டின் மூலம் மின்சார பாவனையாளர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
கட்சி தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுடன் சுமார் இரண்டு மணிநேரம் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேற்படி கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமை செயலாளர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச, லங்கா சமசமாஜ கட்சியின் தலைமை செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன், ஐக்கிய மக்கள் கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.