யாழ். போதனா வைத்தியசாலையின் பரிபாலனத்துக்கு உட்பட்ட கொரோனா சிகிச்சை நிலையங்களின் பாவனைக்கென ஒரு தொகுதி முகக் கவசங்கள் மற்றும் நோயாளர்களுக்கான யோகட், பழங்கள் உட்பட சுமார் ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருள்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தியிடம் கையளிக்கப்பட்டன.
கொழும்பு மத்தி றோட்டறிக் கழகத் தலைவர் றொட்டேறியன் அபயன் விநோதன் மற்றும் கொழும்பு நகர் மத்தி இன்னர்வீல் கழகத் தலைவர் திருமதி ஜெயந்தி வினோதன் ஆகியோரின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக் கழகப் பதிவாளர் வி. காண்டீபனால் இந்தப் பொருள்கள் கையளிக்கப்பட்டன.
இதன்போது , கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரியும், போதனா வைத்தியசாலை திட்டமிடல் வைத்திய அதிகாரியுமான மருத்துவர் எஸ். சிவபாதமூர்த்தி, போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்களான மருத்துவர் எஸ். ஜமுனாநந்தா, எஸ். சிறிபவானந்தராஜா, கணக்காளர் எஸ். பிரசாத் மற்றும் யாழ்பாணம் றோட்டறிக் கழகம், சுன்னாகம் றோட்டறிக் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.