சமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி ஏற்றுமதியான 985 மில்லியன் டொலருடன் ஒப்பிடும்போது வங்கியின் ஊடாக நாட்டுக்கு கிடைக்கும் மாதாந்த சராசரி ஏற்றுமதி வருவாயின் பெறுமதி 640 மில்லியன் டொலர்களாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த இரண்டுக்கும் இடையிலான இடைவெளி 345 மில்லியன் டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஏற்றுமதியாளர்கள் தமது 100 வீத ஏற்றுமதி வருமானத்தையும் நாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற விதிமுறையுடன் இணங்கி செயற்படுகின்றனரா என்ற கேள்வியை இந்த தரவு எழுப்புகிறது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் அந்நிய செலாவணி விகித நகர்வுகள் மீது தேவையற்ற ஊகங்கள் காரணமாக ஏற்றுமதி வருவாயை மாற்ற வர்த்தகர்கள் தயக்கம் காட்டுவதாகவும் இதன் காரணமாக உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தைக்கு வரவு கட்டுப்படுத்துகிறது என்றும் மதியவங்கி சுட்டிக்காட்டியுள்ளது.