எதிர்வரும் காலங்களில் கொழும்பிலுள்ள உணவகங்களில் தடுப்பூசி அட்டைகளை காட்டி வாடிக்கையாளர்கள் உணவருந்தும் நடைமுறை கொண்டுவரப்படலாம் என கொழும்பு நகர உணவகக் குழுமத்தின் தலைவர் ஹர்போ குணரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக கொழும்பில் உள்ள உணவக உரிமையாளர்கள் பலரிடம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தடுப்பூசி அட்டையை உணவகத்தில் பணிப்புரிபவர்களும் காட்டுவது, உணவகத்திற்கு ஆதரவளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் எனவும் ஹர்போ குணரத்ன கூறியுள்ளார்.
அத்துடன் வாடிக்கையாளர்கள், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டமைக்கான அடைடையை தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்து வைத்து, அதனைக் கூட காண்பிக்க முடியுமெனவும் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பெரும்பாலான உணவகங்களிலுள்ள ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறி பேட்ஜ் அணிந்து இருப்பார்கள். அதனால், வரும் வாடிக்கையாளர்களுக்கு ஊழியர்கள் கூட தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள் என்பது தெரியும் என அவர் கூறியுள்ளார்.