இலங்கை வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு உள்நாட்டு போரின் போது காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் இந்த சந்திப்பு இடம்பெறும் என கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது, காணாமல் போனவர்களைக் கண்டறிய அரசாங்கம் மேற்கொண்ட மந்தமான முயற்சிகள் குறித்து கவலை வெளியிடப்பட்டது.
மேலும் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணையில் அரசாங்கம் வெளிப்படையாக இழுத்தடிப்பை செய்கின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் விஜயம் ஒக்டோபர் 5 ஆம் திகதி நிறைவுபெறுவதற்கு முன்னர், காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வந்துள்ள குறித்த தூதுக்குழு, கடந்தவாரம் சிவில் சமூக குழுக்கள், எதிர்க்கட்சிகள், சிறுபான்மை சமூக பிரதிநிதிகள் மற்றும் வெளிவிவகார, தொழிலாளர் மற்றும் நீதி அமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.