மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
நாடளாவிய ரீதியில் தாதியர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மன்னார் மாவட்டத்தில் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக இந்த இக்கட்டான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சேவையை கருத்தில் கொண்டு வழங்க வேண்டிய உரிமைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டததை 41 தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். ஆகவே, கடந்த காலங்களில் கொரோனாவிற்காக வழங்கப்பட்ட 7 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பனவை, கொரோனா காலம் முடியும் வரை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் கவனம் செலுத்தி உரிய தீர்வை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை மேற்கொண்டனர்.
குறித்த போராட்டத்தினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள், பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.