ஆப்கானிஸ்தான் மாநாட்டில் பங்கேற்க தலிபான்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்யத் தூதர் ஸமீர் காபுலோவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானுக்கு நிவாரணப் பொருட்களை எவ்வாறு அளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது’ என கூறினார்.
ஆப்கான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பாகிஸ்தான், ஈரான், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் பங்கேற்கும் சர்வதேச மாநாடு மாஸ்கோவில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை நெருக்கடி தொடர்பாக விவாதிப்பதற்காக ஜி-20 நாடுகளின் மாநாடு எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. அந்த மாநாட்டின் தொடர்ச்சியாக, மாஸ்கோவில் ஆப்கான் மாநாடு நடைபெறவிருக்கிறது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகளை அவசர அவசரமாக திரும்ப அழைத்துக் கொண்ட போதும், காபூலில் ரஷ்யத் தூதரகம் வழக்கம் போல் தொடர்ந்து இயங்கி வருகிறது
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை ரஷ்யா ஏற்றுக் கொண்டாலும், அந்த ஆட்சிக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்காமல் உள்ளது.
கடந்த 1980-களில் ஆப்கானிஸ்தானை சோவியத் ஒன்றியத் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற போரில் 20 இலட்சம் ஆப்கானியர்கள் உயிரிழந்தனர் 70 லட்சம் பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் போரில் 14,000 சோவியத் ஒன்றிய வீரர்களும் உயிரிழந்தனர்.