உலகின் இரு பெரும் பொருளாதார சத்திகளான அமெரிக்கா மற்றும் சீனாவின் ஜனாதிபதிகள் ஆண்டு இறுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸ்லாந்தில் நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் சீனாவின் உயர்மட்ட தூதர் ஆகிய இருவரின் சந்திப்பு முடிந்த சில மணி நேரத்திலேயே அமெரிக்க, சீன ஜனாதிபதிகளின் சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவிவரும் நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
காணொளி காட்சி மூலம் இந்த சந்திப்பை நடத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாதம் ரோமில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் சீன ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஸி ஜின்பிங் கலந்து கொண்டிருந்தால், அங்கேயே இருவர்களுக்கிடையிலான சந்திப்பு நடைபெற்றிருக்கும்.