சர்வதேச அளவில் நிலக்கரியின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதால், இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக மாநில அரசுகள் தெரிவித்து வருகின்ற நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரஹலாத் ஜோஷி, சர்வதேச அளவில் நிலக்கரியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் நிலக்கரி சுரங்கங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை அனுப்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
இருப்பினும் தற்போது போதிய அளவிலான நிலக்கரி கையிருப்பில் இருப்பதாகவும், அதனால் பயம் தேவையில்லை என எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை அனுப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.