இந்திய இராணுவத்தின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவண, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, தமது நாடு அதிகளவில் எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தவாறு, ஜெனரல் தனது கலந்துரையாடலை ஆரம்பித்தார்.
தான் இராணுவச் சேவையில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில், இந்தியாவில் பெற்ற இராணுவப் பயிற்சிகள் மற்றும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட ஜனாதிபதி, இந்திய இராணுவப் பயிற்சிகளின் மூலம் நம் நாட்டு இராணுவ அதிகாரிகளுக்குக் கிடைக்கும் தலைமைத்துவப் பண்புகள் குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார்.
பல தேச எல்லைகளால் சூழ்ந்துள்ள இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், மலைசார்ந்த கடினமான பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் தலைமைப் பயிற்சிபெறும் அதிகாரிகளுக்காக இந்திய இராணுவ அதிகாரிகள் பரிந்துரைக்கும் தரநிலைகள் போன்ற விடயங்களை, ஜெனரல் மனோஜ் முகுந்த்திடம், ஜனாதிபதி கேட்டுத் தெரிந்துகொண்டார்.
முன்னாள் இராணுவ அதிகாரி என்ற வகையில், அந்த நினைவுகள் குறித்து கலந்துரையாடக் கிடைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டார்.