மட்டக்களப்பு ஆயித்தியமலை, கமநல சேவைகள் திணைக்களத்துக்கு முன்னாள் உரத்தை வழங்குமாறு கோரி விவசாயிகள் ‘உரம் இன்றி உழவு இல்லை’ எனும் தொனிப்பொருளில் இன்று (திங்கட்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 20 விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், பா.அரியேந்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ,இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாநகரசபை மேஜர். ரி.சரவணபவான் உட்பட பல அரசியல்வாதிகள் கலந்துகொண்டு
கோட்டாவே அரசே உரத்தை தா, மொட்டு அரசே உரத்தை தா, அமைச்சரே பொய் கூறாதே உரத்தை வழங்கு, மறக்காதே மறக்காதே எமது நாடு விவசாய நாடு என்பதை, அடக்காதே அடக்காதே விவசாயிகளை அடக்காதே.
தடுக்காதே தடுக்காதே விவசாய வருமானத்தை தடுக்காதே, சிதைக்காதே சிதைக்காதே விவசாயிகளின் நம்பிக்கையை சிதைக்காதே,
அரசே விவசாயிகளின் வாழ்கையை குழிதோண்டி புதைக்காதே, அழிக்காதே அழிக்காதே எமது பொருளாதாரத்தை அழிக்காதே, வேண்டும் வேண்டும் உரம் வேண்டும் என சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஒரு மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை பிரதேசங்களிலும் இந்த ஆர்பாட்டம் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது