இலங்கையில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் வழிபாட்டுதலங்களில் சமய அனுஸ்டானங்களை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சமய அனுஸ்டானங்கள் மற்றும் விசேட வழிபாடுகளுக்கான தினங்களில் நேற்று முதல் 50 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய நாட்களில் தனித்தனியாகச் சென்று மக்கள் வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த சந்தர்ப்பங்களில் உரிய சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வழிபாட்டுத் தலங்கள், நுழைவாயில், காத்திருப்புப் பகுதிகள், பிரசங்க அரங்குகள் மற்றும் பிரார்த்தனை அரங்குகள் உள்ளேயும் வெளியேயும் கூட்டமாக இருக்கக் கூடாது என அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பகுதிகளில் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நபர்களின் உடல் தூரத்தை உறுதிப்படுத்த குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியில் அடையாளங்கள் வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைத்து இடங்களும் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளைக் கழுவ வேண்டும், அதே சமயம் மதகுருமார்கள் உட்பட மத வழிபாட்டுத் தலங்களில் நுழையும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் வேண்டுமென்றும் அவர் அறிவித்துள்ளார்.