யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஆரிய குளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரை ஆரம்பம் முதலே தலையீடு செய்து வருகிறது என பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
குளத்தின் நடுவே தியான மண்டபம் அமைக்க வேண்டும் என நாகவிகாரையின் விகாராதிபதி விமலதேரர் வலியுறுத்தி வந்தார்.
ஆனால் தற்போது நடைபாதை அமைக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் குளத்தைச் சுற்றுலாத் தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது என்றும் மாநகர முதல்வருக்கு கடிதம் மூலம் கட்டளை பிறப்பித்துள்ளார் என சுட்டிக்காட்டினார்.
குளத்தின் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரையின் இத்தகைய நாட்டாண்மையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யாழ்நகர மையத்தில் நுழைவாசலில் குறித்த குளம் அமைந்திருப்பதால் மக்களைக் கவரும் சூழல்சார் சுற்றுலா மையமாக அமைப்பதை விரும்பாத விகாராதிபதி அபிவிருத்திப் பணிகளுக்குத் தடைகளை ஏற்படுத்தி வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் ஆரியகுளத்தில் ஒரு காலத்தில் பிக்குகள் நீராடினார்கள் என்ற கருத்தைப் பரப்புவதன் மூலம் குளத்தின் மீது உரிமை கொண்டாட முயலும் விகாராதிபதி, அபிவிருத்திப் பணிகளை நிறுத்துவதற்கு அல்லது தமக்குரியதாக மாற்றி அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.