அமெரிக்க படை வீரர்கள் தாய்வானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக, தாய்வான் ஜனாதிபதி சாய் இங்க் வென் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சி.என்.என். ஊடகத்துக்கு அளித்த சிறப்பு செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தாய்வானில், 2 கோடியே 30 இலட்சம் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், தங்களுக்குத் தகுதியான சுதந்திரத்தை உறுதி செய்யவும் ஒவ்வொரு நாளும் கடினமாக முயற்சித்து வருகிறோம்.
சீனாவிடம் இருந்து வருகிற அச்சுறுத்தல், ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நாங்கள் இந்த முயற்சியில் தோற்றுப்போனால், இந்த மதிப்புகளில் நம்பிக்கை உள்ளவர்கள், அவர்கள் போராட வேண்டியது மதிப்புக்குரியதுதானா என்று சந்தேகிக்கிற நிலை வந்து விடும்.
அமெரிக்க படை வீரர்கள் தாய்வானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா எங்களுக்கு அந்த வகையில் பரந்த அளவிலான ஒத்துழைப்பை அளித்து வருகிறது. அதன் நோக்கம், எங்கள் இராணுவ திறனை அதிகரிப்பதுதான்.
தாய்வான் ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாகும். உலக அளவில் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு, ஜனநாயக மதிப்பீடுகள் நிலை நிறுத்தப்படுவதற்கு தாய்வான் பாதுகாக்கப்பட வேண்டும்’ என கூறினார்.
தாய்வானில் அமெரிக்க படை வீரர்கள் பயிற்சியில் இருக்கிறார்கள் என்பதை முதன்முதலாக ஒப்புக்கொண்டுள்ள தாய்வான் ஜனாதிபதி இவர்தான். அதே நேரத்தில் எவ்வளவு படை வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை இவர் வெளிப்படையாக கூறவில்லை.
சீனாவுடன் கடந்த 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்கு பின்னர், தாய்வான் தனி நாடானது. ஆனால், இதை சீனா ஏற்காமல், தங்களது ஒருங்கிணைந்த பகுதி என்று தொடர்ந்து கூறி வருகிறது.
எனினும் தாய்வான், சீனாவின் கட்டுப்பாட்டில் இல்லை. ஜனநாயக முறையிலான அரசாங்கம் தான் அங்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.
இந்தநிலையில் சீனக் கடற்கரையில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள தாய்வானை, சீனாவுடன் மீண்டும் இணைப்போம் என்று சீன ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஆனால், தாய்வானுக்கு சீனா மூலம் அச்சுறுத்தல் வரும் பட்சத்தில், அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.